மனைவி மீதான காதல்; மிதிவண்டியில் 30,000 கி.மீ தூரம் உலகை சுற்றிய 69 வயது முதியவர்
69 year old candian travels 30000 km by bicycle memory of late wife: மனைவி மீதான காதலில் 69 வயது முதியவர், மிதிவண்டியில் 30,000 கி.மீ தூரம் உலகை சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
புற்றுநோயால் உயிரிழந்த மனைவி
கனடாவை சேர்ந்த 69 வயதான மார்க் ஹெர்ப்ஸ்ட் என்பவரின் மனைவி ஜாக்கி, 2021 ஆம் ஆண்டில் அவரது 55 வயதில் செதிள் உயிரணுப் புற்றுநோயால் உயிரிழந்தார்.

மனைவி இறந்த பின்னர் அந்த துக்கத்தை ஊக்கமாக பயன்படுத்திய மார்க் ஹெர்ப்ஸ்ட், அதிக தூரங்களுக்கு மிதிவண்டி ஓட்டுவதில் ஈடுபாடு காட்டினார் .
மேலும், தன் மனைவி போல் யாரும் புற்றுநோயால் பாதிக்கப்பட கூடாது எனவும், சாதனைகளை வயது தடையில்லை என்பதை நிரூபிக்கவும், மிதிவண்டியில் உலகை சுற்றி வர திட்டமிட்டார் மார்க்.
மிதிவண்டியில் 30,000 கி.மீ தூரம் பயணம்
2025, ஜனவரி 8 அன்று பாங்காக்கிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, 324 நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 27 அன்று அதே நகரத்திற்குத் திரும்பினார்.
இந்தப் பயணத்தில், 30,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக மிதிவண்டிப் பயணம் செய்து, அவுஸ்திரேலியா, தெற்காசியா, மத்திய ஐரோப்பா, அமெரிக்கா வழியாக 25 நாடுகளைக் கடந்துள்ளார்.

இதன் மூலம், மிதிவண்டியில் உலகை சுற்றிய உலகின் வயதான நபர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் பென்னட் 66 வயதில் இந்த சாதனையை படைத்திருந்தார்.
புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதி உதவி
கனடாவில் உள்ள பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் அறக்கட்டளை மூலம் தனது பயணத்திற்காக ஒரு நிதி திரட்டும் நிகழ்வை அவர் ஏற்பாடு செய்தார்.
பயணத்தின் முடிவில், அந்த அமைப்புக்கு 67,746 கனடிய டொலர்(இந்திய மதிப்பில் ரூ.45.78 லட்சம்) நன்கொடை வழங்கினார்.
இந்த பயணத்தின் போது, முன்பின் தெரியாத மக்கள் தனக்கு உதவியதாக மார்க் நெகிழ்ச்சியடைந்தார்.
மலேசிய காவலர்கள் தனது இன்ஸ்டாகிராம் பதிவிற்காக வீடியோ எடுத்து கொடுத்தது, அவுஸ்திரேலியாவில் சார்ஜு பெண் தங்க இடமளித்தது, ஒரு புதிய டயரைக் கொண்டு வர 100 கிமீ தூரம் பயணம் செய்தது என பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்களை குறிப்பிட்டார்.

மேலும், "நாம் மனது வைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு தனது பயணம் அனைவருக்கும், குறிப்பாக முதியவர்களுக்கு ஒரு உந்துதலாக அமையும் என்று நம்புகிறேன்.
நாம் தொடர்ந்து வளர்ச்சி அடைவதற்கு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நம்மை நாமே தொடர்ந்து சவாலுக்குட்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் வளராவிட்டால், நாம் இறந்து கொண்டிருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
தனது மறைந்த மனைவி குறித்து பேசிய அவர், ஜாக்கிதான் எனக்கு எல்லாமே, என் ஆத்ம தோழி. நாங்கள் முதன்முதலில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது சந்தித்தோம், நம்பமுடியாத 25 ஆண்டுகளை ஒன்றாகக் கழித்தோம்.
நாம் கனவு கண்ட எதையும் அடைவதற்குத் தேவையான உடல் மற்றும் மனநலம் எனும் மகத்தான வரங்கள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன என்று நாங்கள் இருவரும் எப்போதும் நம்பினோம்.
ஆனால், இந்த வரங்கள் நமக்குக் கடனாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்றும், ஒரு கட்டத்தில் அவை பறிக்கப்பட்டுவிடும் என்றும் நாங்கள் அறிந்திருந்தோம். அவளது வாழ்வும், மரணமும் அதற்கு சான்று" என தெரிவித்துள்ளார்.
ஜாக்கி உயிரோடு இருந்தபோது செல்ல விரும்பிய இடங்களில் எல்லாம், இந்த பயணத்தின் போது, மார்க் அவளின் சாம்பலை தூவினார்.
சாதனை படைத்ததோடு நின்று விடாமல், பனிச்சறுக்கு, மலையேற்றம், ஸ்கூபா டைவிங், வாசிப்பு கிட்டார் வாசித்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், தனது உலக பயண அனுபவத்தை வைத்து புத்தகம் ஒன்று எழுதி வருகிறார்.