72 வயதில்.. மனைவிக்கு வித்தியாசமான காதல் பரிசளித்த கணவர்! நெகிழ்ச்சி சம்பவம்
72 வயதை சேர்ந்த ஒருவர் 360 கோண அளவில் சுற்றும் வீட்டை தனி ஆளாக கட்டி முடித்து தனது மனைவிக்கு காதல் பரிசாக வழங்கியுள்ளார்.
உலகில் மனிதர்கள் அழிந்தாலும் காதல் அழிவதில்லை. இதற்கு சான்றாக அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் காதல் சின்னமாக கோவில், மண்டபம் போன்றவை கட்டியுள்ளார்.
எடுத்துக்காட்டாக ஷாஜகான் அவரது காதலி மும்தாஜ்க்கு தாஜ்மகாலை கட்டியுள்ளார். அது போலவே ஒருவர் தனது மனைவி மேல் உள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக சுழலும் வீட்டை கட்டி பரிசாக வழங்கியுள்ளார்.
போஸ்னியா ஏர்செகோவினா நாட்டில் உள்ள சேர்பாக் நகரில் வசித்து வருபவர் வொஜின் குஷிக்(72). அவரது மனைவி மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த அவருக்கு சுழலும் வீட்டை பரிசாக கொடுத்துள்ளார்.
இந்த வீடு 360 கோண அளவில் சுழலும். வீட்டின் வேகத்தை தேவைக்கேற்ப மாற்றியமைத்து கொள்ளவும் முடியும். வேகமாக வீடு சுழலும் பட்சத்தில், 22 வினாடியில் வீடு முழுவதுமாக சுற்றி முடிகிறது. மெதுவாக சுழன்றால், ஒருமுறை சுற்றுவதற்கு 24 மணிநேரமும் ஆகும்.
தனது மனைவிக்காக அவரே பார்த்து பார்த்து தனது கைகளால் கட்டிய வீடு ஆகும். இதை தனி ஆளாக கட்டி முடிக்க சுமார் 6 வருடங்கள் எடுத்து கொண்டுள்ளது.
இந்த வீடு பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்ற நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வீட்டை சுற்றி பார்க்க குவிந்து வருகின்றனர்.