தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மேல் கவிழ்ந்த லொறி! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாப மரணம்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த நபர்கள் மேல் மணல் லொறி கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மணல் லொறி
உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள மல்லவன் நகரைச் சேர்ந்தவர் அவதேஷ் (40).
இவர் தனது மனைவி சுதா (35), பிள்ளைகள் லல்லா (5), சுனைனா (11), புட்டு (4) மற்றும் மைத்துனர் கரண் (35), அவரின் மனைவி ஹீரா (30) மற்றும் அவர்களின் பிள்ளைகள் கோமல் (5) ஆகியோருடன் சாலையோர குடிசை அமைத்து வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவதேஷ் குடும்பத்தினர் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த லொறி ஒன்று, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அவதேஷ் குடும்பத்தின் மேல் கவிழ்ந்தது.
8 பேர் சடலமாக மீட்பு
இதில் அனைவரும் மண்ணில் புதையுண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அவர்களின் முயற்சி கைகொடுக்காததால் Bulldozer வாகனம் வரவழைக்கப்பட்டது.
மணல் அள்ளப்பட்டபோது அவதேஷின் குடும்பத்தினர் 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒரு 5 வயது பச்சிளம் குழந்தை ஒன்று மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |