கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை: விடுதலைக்கு தீவிரம் காட்டும் சொந்த நாடு
இஸ்ரேலுக்கான உளவுக் குற்றச்சாட்டில் கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் விடுதலைக்கு முழு முயற்சியை அரசு எடுத்து வருவதாக இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை
கத்தார் ராணுவத்திற்கு பயிற்சி மற்றும் மற்ற சேவைகளை 'அல் தாரா' என்ற தனியார் நிறுவனம் அளித்து வருகிறது. இங்கு, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேர் பணியாற்றி வந்த போது, அந்நாட்டின் கடற்படை திட்டங்களை இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இந்தியர் 8 பேருக்கும் கடந்த வியாழக்கிழமை கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்திய அரசு முழு முயற்சி
இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 பேரின் குடும்பத்தினரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்தார்.
இதுகுறித்து ஜெய்சங்கர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். இந்த வழக்குக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
குடும்பங்களின் கவலைகள் மற்றும் வலிகளை முழுமையாக பகிர்ந்து கொள்கிறோம். அவர்களின் விடுதலைக்கான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். இது தொடர்பான பணிகளுக்கு அவர்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து செயல்படுகிறோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |