கடற்கரையில் கவிழ்ந்த கடத்தல் படகுகள்: 8 உயிரிழந்த நிலையில் மீட்பு பணி தீவிரம்
அமெரிக்காவின் சான் டியாகோ கடற்கரையில் கடத்தல் படகு கவிழ்ந்ததில் 8 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்பு அதிகாரிகளுக்கு வந்த அவசர அழைப்பு
சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 11:30 மணியளவில் சான் டியாகோ தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரிகளுக்கு பெண் ஒருவர் அவசர எண்ணை அழைத்து, 15 பேருடன் மக்கள் கடத்தல்காரர்கள் சிறிய மீன்பிடிக் கப்பலில் இருப்பதாகவும், அவர்கள் நகரின் வடக்கே பிளாக்ஸ் பீச்சிற்கு செல்வதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
Sky News
இதையடுத்து பெண்ணின் ஜிபிஎஸ் ஆயத்தொலைவுகளைப் பயன்படுத்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவசரகால அதிகாரிகள், கலிபோர்னியா கடற்கரையில் இரண்டு படகுகள் கவிழ்ந்து இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த கப்பல்கள் மக்கள் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கும் நிலையில், இந்த படகு விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு படையினர்
பெண்ணின் தொலைபேசி அழைப்பை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வான்வழி மற்றும் நீர் வழியின் மூலம் தேடுதலை தீவிரப்படுத்தினர்.
AP
கடலோரக் காவல் படை அதிகாரி ரிச்சர்ட் பிராமின் கூற்றுப்படி, தொலைபேசியில் அழைத்த பெண், கவிழ்ந்த படகில் 15 பேர் இருந்ததாகக் கூறினார், ஆனால் அது ஒரு மதிப்பீடு மட்டுமே என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் எட்டு பேர் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், மீட்பு குழு குறைந்தது ஏழு பேரைத் தேடி வருகிறது.