சுவிஸ் பொலிஸ் துறையில் இனவெறுப்பு: எட்டு பொலிசார் பணியிடைநீக்கம்
சுவிஸ் பொலிஸ் துறையில் இனவெறி நிலவுவது தொடர்பில் வெளியான ஒரு செய்தி கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அதிர்ச்சியை உருவாக்கிய புகைப்படம்
சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில், 2018ஆம் ஆண்டு கருப்பினத்தவரான மைக் பென் பீற்றர் என்பவர், பொலிசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் நினைவாக, ’RIP Mike’ என எழுதப்பட்ட சுவரின் அருகே சுவிஸ் பொலிசார் ஒருவர் தம்ப்ஸ் அப் காட்டும் புகைப்படம் ஒன்று சுவிஸ் ஊடகமான RTSஇல் வெளியானது.
இந்த விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில், அரசு சட்டத்தரணி அந்த பொலிசாரின் மொபைலை பறிமுதல் செய்து ஆராய்ந்தபோது, அதிரவைக்கும் சில தகவல்கள் தெரியவந்தன.

ஆசியர்கள், கருப்பினத்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் சுவிஸ் பொலிசார்? அதிரவைக்கும் ஒரு செய்தி
அதாவது, லோசான் நகர பொலிசாரில் பத்தில் ஒருவர் உறுப்பினராக இருக்கும் வாட்ஸ் ஆப் குழுவில் அந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது.
அத்துடன், அந்த குழுவிலிருந்த பொலிசார் சிலர், இனம், நிறம், மதம், பாலினம், நாடு ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை கேலி செய்து கருத்துக்களை பகிர்ந்துவந்துள்ளதும் தெரியவர, கடும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.
எட்டு பொலிசார் பணியிடைநீக்கம்
இந்நிலையில், வாட்ஸ் ஆப் குழுவில் பாகுபாட்டுச் செய்திகள் பகிரப்பட்ட விடயத்துடன் தொடர்புடைய பொலிசார் எட்டு பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே நான்கு பொலிசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக நான்கு பொலிசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக லோசான் பொலிஸ் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து லோசான் பொலிஸ் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சர்ச்சைக்குரிய புகைப்படத்தை அனுப்பிய எட்டு பொலிசாரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த விடயம் தொடர்பில் இனி யாரும் பணியிடைநீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |