ஆசியர்கள், கருப்பினத்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் சுவிஸ் பொலிசார்? அதிரவைக்கும் ஒரு செய்தி
சுவிட்சர்லாந்திலும் இனவெறி நிலவுவது தொடர்பான ஒரு செய்தி வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அதிர்ச்சியை உருவாக்கிய புகைப்படம்
சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் 2018ஆம் ஆண்டு கருப்பினத்தவரான மைக் பென் பீற்றர் என்பவர் பொலிசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் நினைவாக, ’RIP Mike’ என எழுதப்பட்ட சுவரின் அருகே சுவிஸ் பொலிசார் ஒருவர் தம்ப்ஸ் அப் காட்டும் புகைப்படம் ஒன்று சுவிஸ் ஊடகமான RTSஇல் வெளியானது.
இந்த விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில், அரசு சட்டத்தரணி அந்த பொலிசாரின் மொபைலை பறிமுதல் செய்து ஆராய்ந்தபோது, அதிரவைக்கும் சில தகவல்கள் தெரியவந்தன.
அதாவது, லோசான் நகர பொலிசாரில் பத்தில் ஒருவர் உறுப்பினராக இருக்கும் வாட்ஸ் ஆப் குழுவில் அந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது.
அத்துடன், அந்த குழுவிலிருந்த பொலிசார், இனம், நிறம், மதம், பாலினம், நாடு ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை கேலி செய்து கருத்துக்களை பகிர்ந்துவந்துள்ளதும் தெரியவர, கடும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.
மேலும், ஆசியர்கள், கருப்பினத்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக சுவிஸ் பொலிசார் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல் அல்லது சந்தேகம் எதுவும் இல்லாத நிலையிலேயே, ஒரு ஆளைப் பார்த்ததுமே அவர் ஆசியர் அல்லது கருப்பினத்தவர் என்றால், தேவையில்லாமல் அத்தகையவர்களை பொலிசார் சோதனைக்குட்படுத்திவருவதும் தெரியவந்துள்ளது.
இந்த விடயங்கள் வெளியானதைத் தொடர்ந்து, லோசான் பொலிசார் மட்டுமே இப்படிப்பட்டவர்களா அல்லது மொத்த சுவிட்சர்லாந்திலும் இதே நிலைதானா என்னும் கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில், சுவிஸ் பொலிஸ் அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவரான Emmanuel Fivaz, சில பொலிசார் தவறு செய்துள்ளார்கள் என்பதற்காக மொத்த பொலிசாரையும் குற்றம் சாட்டக்கூடாது என்று கூறியுள்ளார்.
பொலிஸ் துறையில் இனம், நிறம், மதம், பாலினம், நாடு ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ள அவர், இந்த விடயங்கள் தொடர்பில் பொலிசாருக்கு பயிற்சி தேவை என்றும் கூறியுள்ளார்.
மக்களில் பெரும்பாலானோருக்கு இன்னமும் பொலிசார் மீது நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ள அவர், இன்னமும் அவர்கள் உதவி தேவைப்படும்போது பொலிசாரை உதவிக்கு அழைப்பார்கள் என தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |