பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து?
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதற்கான கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இலங்கை-பாகிஸ்தான் ஒருநாள் போட்டி தொடர்
பாகிஸ்தான் - இலங்கை இடையே மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டி செவ்வாய்க்கிழமை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகள் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ராவல்பிண்டி மைதானத்தில் வைத்து நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு திரும்ப கோரிக்கை விடுத்த இலங்கை வீரர்கள்
இந்நிலையில் ராவல்பிண்டி மைதானத்திற்கு அருகிலுள்ள இஸ்லாமாபாத்தில் நடந்த திடீர் குண்டு வெடிப்பு சம்பவம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் மீதமுள்ள கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்யுமாறு 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அவர்களது கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அட்டவணையின் படி, இரண்டாவது போட்டி நடைபெற இருக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு இலங்கை வீரர்களின் இந்த கோரிக்கை முன்வந்துள்ளது.
PTI செய்தி நிறுவனத்தின் தகவல் படி, இலங்கை வீரர்களின் கோரிக்கைகளின் காரணமாக திட்டமிட்டப்படி இரண்டாவது போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை வீரர்களின் பீதிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கை வீரர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |