சிறு தவறு... 1660 கோடியை தொலைத்த பிரித்தானியர்: உள்ளூர் கவுன்சில் மீது புகார்
சுமார் 162 மில்லியன் பவுண்டுக்கும் அதிக மதிப்பிலான தரவுகள் கொண்ட கம்ப்யூட்டர் ஹார்ட் டிரைவ் ஒன்றை தவறுதலாக தொலைத்து விட்டதாக பிரித்தானியர் ஒருவர் தமது உள்ளூர் கவுன்சிலை நாடியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹார்ட் டிஸ்க்கில் 8,000 பிட்காயின்கள்
தமது குடியிருப்பில் இருந்து பெறப்பட்ட குப்பையானது உள்ளூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டுள்ளதாகவும், தற்போது அப்பகுதியில் தேடுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Image: WALES NEWS SERVICE
நியூபோர்ட் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் ஹோவெல்ஸ் என்பவரே குப்பையில் வீசப்பட்ட தமது கணினி ஹார்ட் டிஸ்க்கில் 8,000 பிட்காயின்களை சேமித்து வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
2013ல் தவறுதலாக அந்த ஹார்ட் டிஸ்க் குப்பையில் வீசப்பட்டதாக ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பின்னர் தனது உள்ளூர் கவுன்சிலை அணுகி, நியூபோர்ட் சிட்டி கவுன்சில் குப்பைக் கிடங்கில் இருந்து அந்த ஹார்ட் டிஸ்க்கை தேடி கண்டுபிடிக்க அனுமதி கோரியுள்ளார்.
ஆனால் உள்ளூர் கவுன்சில் மொத்தமாக மறுப்பு தெரிவிக்க, கடந்த 10 ஆண்டுகளாக ஜேம்ஸ் இந்த விவகாரத்தில் போராடி வருகிறார். ஒருநாள் கண்டிப்பாக அந்த 1660 கோடி மதிப்பிலான ஹார்ட் டிஸ்க் தமது கைக்கு வரும் என்ற நம்பிக்கையில் ஜேம்ஸ் உள்ளார்.
சட்ட நடைமுறையை பின்பற்ற முடிவு
உள்ளூர் கவுன்சிலை பொறுத்தமட்டில், அனுமதி அளிப்பதில் சிக்கல் இருப்பதாகவும், கணினி ஹார்ட் டிஸ்க் போன்ற ஒரு சிறிய கருவியை மலை போல குவிந்து கிடக்கும் குப்பையில் இருந்து தேடுவது சாத்தியமல்லாத ஒன்று எனவும் தெரிவிக்கின்றனர்.
Image: WALES NEWS SERVICE
ஆனால் 1660 கோடி மதிப்பிலான பிட்காயின்களை இழக்க முடியாது என குறிப்பிட்டுள்ள ஜேம்ஸ் தற்போது சட்ட நடைமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமக்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் கவுன்சில் நிர்வாகத்திற்கு செப்டம்பர் 18ம் திகதி வரையில் கால அவகாசம் அளித்துள்ளதாகவும், அதன் பின்னர் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் ஜேம்ஸ் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
2009ல் பிட்காயின் அறிமுகம் செய்யப்பட்ட நாட்களில், ஜேம்ஸ் பல எண்ணிக்கையில் வாங்கிக் குவித்துள்ளார். அதன் மதிப்பு காலப்போக்கில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை தமக்கிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய மதிப்பில் 1 பிட்காயின் விலை 20,694 பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |