22 வயதில் பில்லியன் டொலர் சொத்து... தற்போது 11,000 ஆண்டுகள் சிறை தண்டனை: அவர் செய்த குற்றம்
முதலீட்டாளர்களை ஏமாற்றி மில்லியன் கணக்கான டொலர்கள் தொகையை சுருட்டிய கிரிப்டோகரன்சி நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு உடன்பிறப்புகளுக்கு தலா 11,196 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பல ஆயிரம் ஆண்டுகள் சிறை
துருக்கியை சேர்ந்த 29 வயது Faruk Fatih Ozer என்பவர் மற்றும் அவரது சகோதரர்கள் இருவருக்குமே பல ஆயிரம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஃபாரூக் ஓசர் தமது தோடெக்ஸ் கிரிப்டோகரன்சி நிறுவனம் திடீரென்று பெரும் இழப்பை எதிர்கொண்ட நிலையில், 2021ம் ஆண்டு அல்பேனியாவுக்கு தப்பினார்.
இந்த நிலையில், அவர் ஜூன் மாதம் மீண்டும் துருக்கியிடம் ஒப்படைக்கப்பட, பணமோசடி, முறைகேடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் குற்றவாளி என விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
தமக்கு சதியில் ஈடுபடும் திட்டமிருந்தால், வெளிப்படையாக நடந்துகொள்ளாமல் இருந்திருப்பேன் எனவும் ஓசர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, பூமியில் உள்ள எந்தவொரு நிறுவனத்தையும் வழிநடத்தும் அளவுக்கு தாம் புத்திசாலி எனவும் ஓசர் குறிப்பிட்டுள்ளார்.
வெறும் 22 வயதில் தோடெக்ஸ் கிரிப்டோகரன்சி நிறுவனத்தை நிறுவியதே அதற்கு சான்று எனவும் ஓசர் தெரிவித்துள்ளார். ஆனால் பண மோசடி வழக்கில் ஓசர் மட்டுமின்றி, அவரது சகோதரி செராப் மற்றும் சகோதரர் குவென் ஆகியோர் அதே குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியை பொறுத்தமட்டில் 2004ல் மரண தண்டனையை ரத்து செய்த நிலையில், குற்றவாளிகளுக்கு பல ஆயிரம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
2022ல் மோசடி மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட தொலைக்காட்சி பிரபலம் ஒருவருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், இவரது 10 ஆதரவாளர்களுக்கும் இதே தண்டனை விதிக்கப்பட்டது.
2 பில்லியன் டொலர் சொத்து
ஓசர் விவகாரத்தில் அரசு தரப்பு 40,562 ஆண்டுகள் சிறை தண்டனை கோரியிருந்தனர். 2017ல் தொடங்கப்பட்ட தோடெக்ஸ் கிரிப்டோகரன்சி நிறுவனமானது குறுகிய காலத்தில் துருக்கியின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி நிறுவனமாக வளர்ந்தது.
மட்டுமின்றி, நாடு முழுவதும் அறியப்படும் பிரபலமாக ஓசர் மாறினார். இருப்பினும், ஏப்ரல் 2021ல் தோடெக்ஸ் கிரிப்டோகரன்சி நிறுவனமானது திடீரென பேரிழப்பை எதிர்கொண்டது. முதலீட்டாளர் பணம் மாயமானது, அத்துடன் ஓசர் தலைமறைவானார்.
இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு அல்பேனியாவில் இன்டர்போலின் சர்வதேச வாரண்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு நாடு கடத்தப்பட்டார்.
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஓசர் 2 பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களுடன் தப்பி ஓடிவிட்டார் என்றே கூறப்பட்டது. ஆனால் விசாரணையில், தோடெக்ஸ் முதலீட்டாளர்களுக்கு 356 மில்லியன் லிராக்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
தோடெக்ஸ் கிரிப்டோகரன்சி நிறுவனம் திவாலாகும் போது இந்த தொகையின் மதிப்பு 43 மில்லியன் டொலர் எனவும், தற்போதைய துருக்கி பண மதிப்பின் படி வெறும் 13 மில்லியன் டொலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |