ரூ. 80 கோடி மதிப்புள்ள 'திமிங்கல வாந்தி' பறிமுதல்! 5 பேர் கைது
இந்திய மாநிலம் கர்நாடகாவில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 80 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டத்துக்கு விரோதமாக விற்க பதுக்கி வைத்திருந்த, வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுத்தப்படும், 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 80 கிலோ திமிங்கல எச்சம், பெங்களூரில் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு பாகல்குண்டே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், மர்ம நபர்கள் சிலர், சட்டத்துக்கு விரோதமாக, Ambergris எனும் திமிங்கலத்திடம் இருந்து எடுக்கப்படும் ஒரு திடப்பொருளை (திமிங்கலத்தின் வாந்தி) விற்பதாக மத்திய குற்றப்பிரிவு பொலிஸாருக்கு (Central Crime Branch) தகவல் கிடைத்தது.
வாசனை திரவியத்துக்கு பயன்படுத்தப்படும் இந்த பொருளுக்கு வெளிநாடுகளில் நல்ல விலை உள்ளது. 1 கிலோ, ஒரு கோடி ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த சி.சி.பி., இணை கமிஷனர் சந்தீப் பாட்டீல், சிறப்பு குழுவை அமைத்து, சோதனை மேற்கொண்டதை அடுத்து, சட்டத்துக்கு விரோதமாக விற்க பதுக்கி வைத்திருந்த, 80 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, பெங்களூரைச் சேர்ந்த, முஜீப் பாஷா (48), முகமது (45), குலாப் சந்த் (40), சந்தோஷ் (31), ஜகனாத் ஆச்சார் (52) ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.