உக்ரைன் போரில் 840 குழந்தைகள் படுகாயம்: தற்காலிக உள்ளூர் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொண்ட ரஷ்யா!
ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் இதுவரை 840 குழந்தைகள் படுகாயம் அடைந்து இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) தகவல் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் இந்த மோதலில் இதுவரை 840 குழந்தைகள் வரை படுகாயம் அடைந்து இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பானது, உக்ரைனின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஒலெக்ஸி டானிலோவ் இதுவரை நடந்த போரில் 28 குழந்தைகள் வரை இறந்துள்ளதாக அறிவித்திருந்ததை தொடர்ந்து அதற்கு அடுத்தநாள் வெளிவந்துள்ளது.
மேலும் அந்தநாட்டின் பாதுகாப்புதுறை அமைச்சர் ஒலெக்ஸி டானிலோவ் நேற்று(வெள்ளிக்கிழமை) உக்ரைனின் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்த போரில் இருந்து தப்பித்து செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ரஷ்ய ராணுவம் ஒத்துழைப்பு மற்றும் வழி அமைத்து தர முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு சுற்று பேச்சுவார்த்தையின் முடிவில், மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்யவும், நாட்டை விட்டு வெளியேறும் பொதுமக்களுக்காக தற்காலிக உள்ளூர் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இதை தொடர்ந்து, இந்த வாரத்தின் இறுதிக்குள் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனவும் தகவல் வெளிவந்துள்ளன.