ஆங்கிலக்கால்வாய் உயிரிழப்புகள்... ஒன்பது பேருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்வோர் உயிரிழந்த வழக்கு தொடர்பில் ஒன்பது ஆட்கடத்தல்காரர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஒன்பது ஆட்கடத்தல்காரர்களுக்கு சிறைத்தண்டனை
2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 14ஆம் திகதி, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு புலம்பெயர்வோர் உயிரிழந்தார்கள், நான்கு பேர் காணாமல்போனார்கள்.
அந்த படகில், இந்தியா, ஆப்கானிஸ்தான், செனகல் மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணித்துக்கொண்டிருந்தபோது அந்த விபத்து நேர்ந்தது.
அந்த துயர சம்பவம் தொடர்பாக, பிரான்சிலுள்ள Lille நகரிலுள்ள நீதிமன்றம் ஒன்று மூன்று ஆட்கடத்தல்காரர்களுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அவர்கள் இந்த கடத்தல் சம்பவங்களின் மூளையாக செயல்பட்டவர்கள். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்கள் அனைவருக்கும் 50,000 முதல் 100,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், தங்கள் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் அவர்கள் அனைவரும் பிரான்சைவிட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |