9 வயது இந்திய வம்சாவளி சிறுவன் மீது இனவெறி தாக்குதல்: அயர்லாந்தில் இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
அயர்லாந்தில் 9 வயது இந்திய சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது இரு நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சிறுவன் மீது தாக்குதல்
செவ்வாய்க்கிழமை அயர்லாந்தின் கார்க் கவுண்டியில் விளையாடி கொண்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 9 வயது சிறுவன் மீது 15 வயது சிறுவன் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் இந்த தாக்குதல் இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என நம்புகின்றனர்.
அதே சமயம் தாக்குதல் நடத்திய சிறுவனை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
அயர்லாந்தில் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக இனவெறி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், 9 வயது சிறுவன் தாக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், புரிந்து கொள்ள முடியாதது என்றும் அயர்லாந்தின் இந்திய கவுன்சில் தலைவர் பிரசாந்த் சுக்லா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டப்ளினில் உள்ள இந்திய தூதரகம், இந்தியர்களை அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும், வெறுச்சோடிய இடங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
அயர்லாந்து ஜனாதிபதி மைக்கேல்.டி.ஹிக்கின்ஸ், இந்தியர்களுக்கு எதிரான வன்முறை வெறுக்கத்தக்கது என கண்டித்துள்ளார்.
மேலும் அயர்லாந்தில் இந்தியர்களின் பங்களிப்பையும் அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |