10 -ம் வகுப்பில் 99 சதவீத மதிப்பெண்கள்.. மருத்துவராகும் கனவில் மாணவிக்கு ஏற்பட்ட துயரம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 சதவீத மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
10 -வகுப்பு மாணவி
இந்திய மாநிலமான குஜராத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 சதவீத மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, மே 11-ம் திகதி குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியத்தின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
இந்த தேர்வில் மோர்பி பகுதியைச் சேர்ந்த ஹீர் கெதியா என்ற 10 -ம் வகுப்பு மாணவி 99.70 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பின்னர், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மூச்சுத்திணறல் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஆரம்பித்துள்ளது.
இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு, ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது மூளை 80 முதல் 90 சதவிகிதம் வேலை செய்வதை நிறுத்திவிட்டது என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நேற்று சிறுமியின் இதய செயல்பாடு நின்றவுடன் உயிரிழந்தார். பின்னர், சிறுமியின் பெற்றோர் அவரது கண்களையும் உடலையும் தானம் செய்தனர்.
சிறுமியின் தந்தை பேசுகையில், "என் மகள் மருத்துவராக வேண்டுமென்று ஆசைப்பட்டார். அவர் மருத்துவராக முடியாவிட்டாலும் பிற உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தானம் செய்தோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |