வளைகாப்புக்காக ரயிலில் சென்ற 7 மாத கர்ப்பிணி.., நிலைதடுமாறி விழுந்து உயிரிழப்பு
ஓடும் ரெயிலில் இருந்து 7 மாத கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவறி விழுந்த கர்ப்பிணி
சென்னையில் இருந்து கொல்லத்திற்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது 7 மாத கர்ப்பிணி கீழே விழுந்தார்.
அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர், உறவினர்கள் ரயிலில் இருந்து இறங்கி, கர்ப்பிணி விழுந்த இடத்தை நோக்கி சென்று பார்த்தனர். ஆனால், கர்ப்பிணி அங்கு இல்லை.
இதையடுத்து ரயில் அங்கிருந்து புறப்பட்டு விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு 20 நிமிடம் தாமதமாக வந்தது.
பின்னர், அங்கிருந்த பொலிஸாரிடம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி தவறி விழுந்துவிட்டதாகவும், மீட்டு தர வேண்டும் என்று கூறினர். இதையடுத்து, பொலிஸார் கர்ப்பிணியை தேட ஆரம்பித்தனர்.
உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்துள்ளார். அதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.
கர்ப்பிணி பற்றிய விவரம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்த சுரேஷ்குமார்(வயது 25) என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், சென்னையில் உள்ள பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி(22) என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர், 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், மேலநீழிதநல்லூருக்கு கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகவும், அங்கேயே அடுத்த நாள் வளைகாப்பு நடத்துவதற்காகவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, கொல்லம் ரயிலில் சென்ற போது கஸ்தூரிக்கு இரவு 8 மணிக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டதால் கை கழுவும் இடத்திற்கு வந்துள்ளார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |