முழுமையாக பற்றியெரிந்த ஒரு பிரித்தானிய தீவு: பதைபதைக்கவைக்கும் காட்சிகள்
பிரித்தானிய தீவு ஒன்று முழுமையாக பற்றியெரியும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Gruinard தீவு என்று அழைக்கப்படும் அந்த தீவு ஸ்காட்லாந்தின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. சனிக்கிழமை இரவு அந்தத் தீவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் Kate Gearing (25) மற்றும் அவரது மகளான Nessie ஆகியோர் தங்கள் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது, Gruinard தீவு தீப்பற்றி எரிவதைக் கண்டுள்ளார்கள்.
பயங்கரமாக அந்தத் தீவில் தீப்பற்றியெரியத் துவங்க, முதலில் பறவைகள் பதற்றத்தில் கத்துவதைத் தாங்கள் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து திடீரென ஒரு மயான அமைதி உருவானதாகவும் தெரிவிக்கிறார் Kate.
இந்த தீவின் பின்னணியில் ஒரு முக்கிய சம்பவம் உள்ளது. 1942இல், அறிவியலாளர்கள் அந்தத் தீவில் ஒரு உயிரி ஆயுதத்தை சோதித்துப் பார்த்தார்கள். வெடிகுண்டுகளில் ஆந்தராக்ஸ் என்னும் ஒரு பயங்கர நோய்க்கிருமியை நிரப்பி, அதை Gruinard தீவில் விடப்பட்டிருந்த ஆட்டு மந்தை ஒன்றின் அருகே வெடிக்கச் செய்து அதன் விளைவுகளை ஆராய்ந்தார்கள் அவர்கள்.
அதற்குப் பிறகு, 20ஆம் நூற்றாண்டில் அந்தத் தீவு கிருமிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1990இல் Gruinard தீவில் ஆந்தராக்ஸ் கிருமிகள் இல்லை என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
எதனால் இப்படி திடீரென தீப்பற்றியது என்பது தெரியாத நிலையில், தீயணைப்புத் துறையின அந்த தீயை அணைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
காரணம், அந்தத் தீவில் மக்கள் யாரும் வாழவில்லை. ஆட்கள் இல்லாத தீவு அது!
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 30 வரை ஸ்காட்லாந்துக்கு காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.