கனேடிய பெண்ணுக்கு அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு: வெளிவராத சுவாரஸ்ய தகவல்
கனேடிய பெண் ஒருவருக்கு அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸின் சித்திதான் அந்த கனேடிய பெண்.
ஆம், கமலா ஹாரிஸின் காலம் சென்ற தாயான ஷ்யாமளா கோபாலன் ஹாரிஸின் தங்கை சின்னி சுபாஷ், கனடாவில்தான் வசிக்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன் அமெரிக்க தலைநகரில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்தியஅராஜகங்களுக்குப் பின் தன் சித்தியை தொலைபேசியில் அழைத்துள்ளார் கமலா.
தான் பாதுகாப்பாகத்தான் இருக்கிறேன் என்பதை தன் சித்திக்கு சொல்வதற்காகத்தான் அந்த தொலைபேசி அழைப்பு.
இப்போது கமலா பயங்கர பிஸியாக இருக்கிறார், அப்படி பரபரப்பாக இருக்கும் நிலையிலும், தான் பாதுகாப்பாக இருப்பதை தெரியப்படுத்துவதற்காக தன்னை அழைத்ததை சொல்லி பெருமைப்படுகிறார் கமலாவின் சித்தியான சின்னி.
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கும், முதல் கருப்பின மற்றும் தெற்காசிய வம்சாவளியினர் கமலா ஹாரிஸ் என்ற முறையில், அவரது தாய் ஷ்யாமளா உயிருடன் இருந்திருந்தால், மிகவும் பெருமைப்பட்டிருப்பார் என்று கூறும் சின்னி, கமலா சான் பிரான்சிஸ்கோ மாகாண அட்டர்னியான பதவியேற்கும் புகைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்களா தெரியாது, அதில் என் சகோதரி ஷ்யாமளாவின் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம் தெரிவதை நீங்கள் காணலாம் என்கிறார்.
12 வயது இருக்கும்போது கமலாவும் அவரது சகோதரியும் கலிபோர்னியாவிலிருந்து மொன்றியலுக்கு தங்கள் தாயுடன் குடிபெயர்ந்ததை நினைவுகூர்கிறார் சின்னி. கமலா, ஐந்து ஆண்டுகள் அங்கு வாழ்ந்து 1981ஆம் ஆண்டு Westmount High School என்ற பள்ளியில் பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு மாநாடு ஒன்றில் உரையாற்றும்போது, தன் குடும்பம் குறித்து குறிப்பிட்ட கமலா, என் குடும்பம் என்பது என் மாமாக்கள், அத்தைகள் மற்றும் சித்திகள் என தமிழில் குறிப்பிட்டதையும் பெருமையுடன் நினைவுகூர்கிறார் சின்னி.
புதன்கிழமை தங்கள் சகோதரியின் மகள் அமெரிக்காவில் துணை அதிபராக பதவியேற்கும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேரில் சென்று பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலை சின்னி குடும்பத்தினருக்கு.
என்றாலும், கனடாவில் தங்கள் வீட்டிலிருந்தவண்ணமே அமெரிக்காவில் மகள் பதவியேற்பதை பார்த்து கொண்டாட முடிவு செய்துள்ளது சித்தி சின்னியின் குடும்பம்.


