ஒரு வயது குழந்தையுடன் திருடப்பட்ட கார்: நேரில் பார்த்த பெண்மணியின் துணிச்சல் முடிவு
அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் ஒரு வயது குழந்தையுடன் திருடப்பட்ட கார் ஒன்று, பெண்மணி ஒருவரின் சமயோசித முடிவால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
மினியாபொலிஸ் நகரில் சனிக்கிழமை இரண்டு வாகனங்கள் திருடு போயுள்ளது. அதில் குழந்தைகள் இருவர் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், கைவிடப்பட்ட நிலையில் ஒரு வெள்ளை நிற வாகனத்தை காண நேர்ந்த அப்பகுதியை சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர், அந்த வாகனத்தை தமது குடியிருப்பில் இருந்து கண்காணித்ததுடன், பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.
அருகாமையில் உள்ள கோவில் வளாகத்திலேயே குறித்த வாகனத்தை அந்த வயதான பெண்மணி பார்த்துள்ளார்.
உடனடியாக அவர் பொலிசாருக்கு தகவல் அளித்ததுடன், பொலிசார் தேடிவரும் வாகனம் அது தானா என்பதையும் உறுதி செய்துள்ளார்.
அந்த வாகனத்தின் உள்ளே இருந்து ஒரு குழந்தை அலறும் சத்தம் கேட்டதும், அவர் உண்மையில் ஸ்தம்பித்து போனதாக தெரிவித்துள்ளார்.
சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், வாகனத்தை மீட்டதுடன் குழந்தையை பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையும் இதேப்போன்ற ஒரு சம்பவம் அப்பகுதியில் நடந்துள்ளது. இதில் 6 வயதான பெண் பிள்ளை ஒருவர் சிக்கியிருந்துள்ளார்.
சிறுமியின் தாயார் துரிதமாக செயல்பட்டு, பொலிசாரின் உதவியுடன் சிறுமியையும் வாகனத்தையும் மீட்டுள்ளார்.