அமெரிக்காவில் இடிந்து விழுந்த 12 மாடி கட்டிடத்தில் மீதமிருந்த கட்டிடமும் தரைமட்டமானது: வீடியோவுடன் வெளியான தகவல்
அமெரிக்காவின் மியாமியில் 12 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தில் இன்னமும் 121பேரைக் காணாத நிலையில், மீதமிருந்த கட்டிடமும் தரைமட்டமாகும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மியாமியிலிருந்த 12 மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், அதிலிருந்த 145 பேர் இடிபாடுகளுக்குள் சிகிய சம்பவம் நினைவிருக்கலாம். தற்போது, அந்த கட்டிடத்தில் மீதமிருந்த பாகமும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு, அதிகாரிகள் குண்டு வைத்து, கட்டுப்படுத்தப்பட்ட முறையில், அக்கம் பக்கத்திலிருந்த கட்டிடங்களுக்கு எந்த சேதமும் இல்லாத வகையில், அந்த கட்டிடத்தில் எஞ்சியிருந்த பாகங்களையும் இடித்து தரைமட்டமாக்கினார்கள்.
சில விநாடிகளுக்குள் அந்த கட்டிடம் காணாமல் போகும் காட்சியை, வெளியான வீடியோ ஒன்றில் காணலாம். விடயம் என்னவென்றால், ஏற்கனவே இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கிடையிலிருந்து 24 பேரின் உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
121 பேரை இன்னமும் காணவில்லை. அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக கட்டிடத்தை இடிக்கும்போது, மீதமுள்ள கட்டிடம் வலுவானதாக இல்லாததால், அது இடிந்து மீட்புப் பணிகளை தாமதப்படுத்தும் ஒரு நிலை ஏற்பட்டது.
அத்துடன், நாளை இரவு ப்ளோரிடாவை எல்சா என்னும் புயல்வேறு தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகவே, ஏற்கனவே இடிந்ததில் மீதமிருக்கும் கட்டிடம் இடிந்து விழுந்து மீட்புப் பணிக்கு இடைஞ்சலாகிவிடக்கூடாது என்பதற்காக, அதை குண்டு வைத்து கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கியுள்ளார்கள்.
கட்டிடம் இடிக்கப்பட்டு 15 முதல் 60 நிமிடங்களுக்குள் மீண்டும் மீட்புப் பணியைத் துவங்க இயலும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.