காரை மோதிவிட்டு தப்பிய சாரதி... விபத்தில் இழந்த காலை பாதுகாப்பாக வைத்திருக்கும் வித்தியாசமான கனேடியர்
கனடாவில், காரை மோதி இரத்தவெள்ளத்தில் இளைஞர் ஒருவரை சாகும் தருவாயில் விட்டுவிட்டு தப்பினார் சாரதி ஒருவர்.
Mississauga என்ற இடத்தில் நடந்த அந்த விபத்தில் காலை இழந்த Justin Fernandes (24) என்ற அந்த இளைஞரால், அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. தன் காலை யாராவது பாடம் செய்து, அதாவது விலங்குகளின் உடலை பாடம் செய்து பத்திரப்படுத்துவதுபோல், பதப்படுத்தி தரமுடியுமா என பேஸ்புக்கில் கேட்டிருந்தார் Justin.
ரொரன்றோவிலுள்ள The Prehistoria Natural History Centre (PNHC) என்னும் அமைப்பு, Justinக்கு இலவசமாக உதவ முன்வந்தது.
அதன்படி, அந்த அமைப்பு அந்த காலை இறுதிச்சடங்கு செய்யும் அமைப்பு ஒன்றிடமிருந்து பெற்று, அதன் மீதிருந்த தசை முழுவதையும் அகற்றிவிட்டு, அந்த எலும்பை பதப்படுத்தி Justinஇடம் கொடுத்துள்ளது.
வாகனத்தை ஒருவர் மீது மோதிவிட்டு திரும்பிக் கூட பார்க்காமல் ஓடிவிடும் பலர் இருக்கிறார்கள், ஆனால், அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது.
தன்னுடைய இழப்பை எப்படியாவது ஈடு செய்யவேண்டுமென்று விரும்பிய Justin, அதை இந்த வகையில் செய்து தனது துக்கத்தை முழுமை செய்துகொண்டுள்ளார்.
இதற்கிடையில், Justinமீது காரை மோதி அவரை சாகும் தருவாயில் விட்டுவிட்டு தப்பிய 29 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனவரி மாதம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.