லொட்டரியில் வென்ற ரூ.1 கோடிக்கு பதில் ரூ.500! வியாபாரியை ஏமாற்றிய விற்பனையாளர்
கேரள லொட்டரியில் ரூ.1 கோடி வென்ற தெருவோர வியாபாரியை ஏமாற்ற முயன்ற லொட்டரி விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள லொட்டரியில் ரூ.1 கோடி
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளால் பலர் வாழ்க்கையை தொலைத்த நிலையில், மாநில அரசு அதற்கான தடையை விதித்தது.
ஆனால், கேரள மாநிலத்தில் லொட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் லொட்டரி சீட்டுகள் விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும்.
கேரளாவில் நாள்தோறும் 50 லட்சம் முதல் கோடி ரூபாய் வரை முதல் பரிசு கொண்ட லொட்டரி சீட்டுகள் விற்பனையாகி வருகிறது.
அந்தவகையில், திருவனந்தபுரத்தில் உள்ள மியூசியம் ஜங்ஷனில் தெருவோரத்தில் தொப்பி விற்கும் சுகுமாரியம்மா (72 ) என்ற வயது மூதாட்டிக்கு லொட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது.
இவர், அந்த பகுதியில் உள்ள லொட்டரி விற்பனையாளர் கண்ணன் என்பவரிடம் ஃபிஃப்டி ஃபிஃப்டி லாட்டரியில் ஒரே சீரிஸில் 12 டிக்கெட்டுகளை ரூ.1200 கொடுத்து வாங்கியுள்ளார்.
இதில் சுகுமாரியம்மாவுக்கு FG 348822 என்று எண் கொண்ட லொட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. இவருக்கு லொட்டரியில் விழும் பணத்தை வைத்து சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்துள்ளது.
ஏமாற்றிய லொட்டரி விற்பனையாளர்
இந்நிலையில், சுகுமாரியம்மாவுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்ததை அறிந்த விற்பனையாளர் கண்ணன் ஏமாற்ற நினைத்துள்ளார். பின்னர், நீங்கள் வாங்கிய 12 டிக்கெட்டுகளுக்கும் தலா 500 ரூபாய் விழுந்துள்ளதாக கூறியுள்ளார்.
அதன்படி ரூ.6000 பரிசுத் தொகை என்பதால் கண்ணனுக்கு ரூ.500 -யை சுகுமாரியம்மா இனாமாக கொடுத்துள்ளார்.
பின்னர், கண்ணன் தனக்கு ரூ.1 கோடி விழுந்ததாக தனது சொந்த ஊரான பள்ளையம் பகுதியில் இனிப்பு கொடுத்து கொண்டாடியுள்ளனர்.
இதனையறிந்த, மற்றொரு லொட்டரி விற்பனையாளரான ராதாகிருஷ்ணன் என்பவர் பிரபா என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதில் பிரபாவுக்கு சுகுமாரியம்மாவை நன்றாக தெரியும்.
பின்னர், இந்த விவகாரம் பிரபா மூலம் சுகுமாரியம்மாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து கண்ணனை தொடர்பு கொண்ட போது மொபைல் எண் சுவிட்ச் ஆஃப் வந்துள்ளது.
பின்னர் காவல் துறையில் சுகுமாரியம்மா புகார் அளித்ததன் பேரில் கண்ணனை காவல்துறை கைது செய்தனர். இதையடுத்து அவரை விசாரித்த போது ஏமாற்றியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும், இன்னும் இரு தினங்களில் சுகுமாரியம்மாவிடம் டிக்கெட் ஒப்படைக்கப்படும் என்றும் அதைத் தொடர்ந்து பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |