பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் வருவோருக்கான பயண விதிகளில் ஒரு முக்கிய மாற்றம்
பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் வரும் முழுமையான கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள், இனி பயணம் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பு செய்யவேண்டிய கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை.
அதற்கு பதிலாக, அவர்கள் பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு செய்துகொண்ட கொரோனா பரிசோதனையின் முடிவுகளை சமர்ப்பிக்கலாம். கடைசி நேர பரிசோதனைகளுக்காக பிரித்தானியாவில் அலைவதிலுள்ள பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் உடனடியாக அமுலுக்கு வருவதாக பிரித்தானியாவில் வாழும் பிரெஞ்சு மக்களின் பிரதிநிதியாகிய, நாடாளுமன்ற உறுப்பினரான Alexandre Holroyd தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெறாதவர்களைப் பொருத்தவரை, அத்தியாவசிய காரணம் இருந்தால் மட்டுமே அவர்கள் பிரான்சுக்குள் நுழைய முடியும் என்னும் விதி நீடிக்கிறது.
முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றவர்களோ எந்த காரணத்துக்காக வேண்டுமானாலும் பிரான்சுக்கு பயணிக்கலாம், அவர்கள் தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம், பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்பு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆவணம் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட பயண சுயவிளக்கம் ஆகியவற்றை மட்டும் எல்லையில் காட்டவேண்டியிருக்கும்.
அவர்கள் பிரான்சுக்குள் வந்தபின், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமோ, மேலும் பரிசோதனைகள் செய்துகொள்ளவேண்டிய அவசியமோ கிடையாது.