மலேசியாவில் வாரத்திற்கு 5 நாட்கள் விமானத்தில் பறக்கும் இந்திய வம்சாவளி தாய்! எதற்கு தெரியுமா?
இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய தாய் ஒருவர் பணி மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்துவதற்காக புதுமையான வழியை கண்டுபிடித்துள்ளார்.
ஏர் ஏசியாவில்(AirAsia) உதவி நிதி மேலாளராகப் பணிபுரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராச்சல் கவுர் (Racheal Kaur), தனது இரண்டு குழந்தைகள் (11 மற்றும் 12 வயது) அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக, பினாங்குக்கும்(Penang) செபாங்கிற்கும்(Sepang) இடையே வாரத்தில் ஐந்து நாட்கள் விமானத்தில் பயணிக்கிறார்.
கவுரின் அன்றாட வாழ்க்கை
கவுரின் வழக்கத்திற்கு மாறான அன்றாட வாழ்க்கை அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
காலை 5:55 மணி விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர் விரைவாக தயாராகிறார்.
இது ஆடம்பரமாக தோன்றினாலும், இந்த தினசரி பயணம் அவரது முந்தைய ஏற்பாட்டிற்கு உண்மையில் சிக்கனமான மாற்றாகும்.
முன்பு அவர் கோலாலம்பூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார், வார இறுதி நாட்களில் மட்டுமே பினாங்குவில் உள்ள தனது குடும்பத்தைப் பார்க்கச் செல்வார்.
ஆனால், குழந்தைகளின் வளரும் பருவத்தில் தாயின் ஆதரவு அதிகமாகத் தேவைப்பட்டதால், அவர் தினசரி விமான பயணத்தை தேர்ந்தெடுத்தார்.
இது தொடர்பாக கவுர் CNA-வுக்கு அளித்த நேர்காணலில், "அவர்கள் வளர்ந்து வருவதால், அவர்களின் தாய் அருகில் இருக்க வேண்டிய அவசியம் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த தினசரி விமான பயணிகளின் மூலம், ஒவ்வொரு மாலையும் வீட்டிற்குச் சென்று, குழந்தைகளின் வீட்டுப் பாடங்களுக்கும், கடைசி நிமிடத் தேவைகளுக்கும் உதவ முடிவதாக தெரிவித்துள்ளார்.
பணத்தை மிச்சப்படுத்தும் விமான பயணம்
ஆச்சரியப்படும் விதமாக, இந்த ஏற்பாடு அவருக்கு பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.
கோலாலம்பூரில் வாடகைக்கு வீடு எடுக்க மாதத்திற்கு RM1,400 முதல் RM1,500 (Rs 24,500 - Rs 26,250) வரை செலவாகியது.
ஏர் ஏசியாவின் ஊழியர் தள்ளுபடி காரணமாக, அவரது தினசரி விமானப் பயணங்களுக்கு இப்போது மாதத்திற்கு RM1,100 (Rs 19,250) மட்டுமே செலவாகிறது.
அவரது உணவுச் செலவுகளும் குறைந்துள்ளன, இதன் விளைவாக மாதத்திற்கு சுமார் RM700 (Rs 12,250) வரை சேமிக்கிறார்.
30-40 நிமிடங்களில் சுமார் 400 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய விமானங்கள், கவுர் காலை 7:45 மணிக்கு அலுவலகத்தையும், மாலை 7:30 மணிக்கு வீட்டையும் அடைய உதவுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |