விவைவாசி உயர்வு வருகிறது... கனடாவிலுள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி
கனேடிய உணவு விநியோகஸ்தர்கள், உணவுப்பொருட்களின் விலை மேலும் உயரும் என பல்பொருள் அங்காடிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளார்கள்.
ஏற்கனவே உணவுப்பொருட்களின் விலை இரண்டு இலக்க அளவுக்கு அதிகரிப்பைக் கண்ட நிலையில், கனேடிய உணவு விநியோகஸ்தர்கள் அனுப்பியுள்ள கடிதங்கள், உணவுப்பொருட்களின் விலைகள் இந்த இலையுதிர்காலத்தில், மேலும் அதிகரிக்கும் என்ற சமிக்ஞையைக் கொடுத்துள்ளன.
உதாரணமாக, பால் பொருட்களை எடுத்துகொண்டால், சில நிறுவன தயாரிப்புகளின் விலைகள், செப்டம்பர் 1ஆம் திகதி முதல், லிற்றருக்கு 2 முதல் 2.5 சென்ட்கள் வரை உயர இருக்கின்றன.
பால் உற்பத்தியாளர்கள், கூடுதல் உற்பத்திச் செலவு, கால்நடைத் தீவனம், மின்சாரம் மற்றும் உரம் ஆகியவற்றின் விலைவாசி உயர்வு காரணமாக பாலின் விலையை உயர்த்தும் சூழ்நிலைக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது.
அதுபோக, எதிர்பாராத மற்றும் தொடர்ந்து நீடிக்கும் பணவீக்கம் அளித்துள்ள அழுத்தமும், உற்பத்தி, ஆற்றல், பணியாளர் மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கான செலவுகளை பாதித்துள்ளதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
கிராம மக்களின் நிலையோ இன்னும் மோசம் எனலாம். காரணம், தூரமாக உள்ள இடங்களுக்கு போக்குவரத்து மற்றும் எரிபொருள் கட்டணங்களும் சேர்ந்துகொள்ளும் என்பதால் அதற்கான பாரத்தையும் அவர்களே சுமக்கவேண்டிய நிலை உள்ளது.
மே மாத நிலவரப்படி, கடைகளில் வாங்கப்படும் பொருட்களின் விலைகள் ஓராண்டுக்கு முந்தைய நிலவரத்தை ஒப்பிட்டால், 9.7 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்தன.
அது 10 சதவிகிதம் அளவுக்கு உயரக்கூடும் என்று கூறும் உணவியல் துறை நிபுணர்கள், இப்போது துவங்கி செப்டம்பர் இறுதிக்குள் உச்சம் தொடவிருக்கும் உணவுப்பொருட்களின் விலை, அது 10 சதவிகிதம் வரை உயர்ந்து, அதன் பின்னரே சீராகக்கூடும் என்று கூறியுள்ளார்கள்.