மருத்துவமனையில் மர்ம நபர் கத்துக்குத்து தாக்குதல்... நான்கு பேர் பலி: மருத்துவர்களும் நோயாளிகளும் உயிர் தப்ப ஓட்டம்
சீனாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் திடீரென ஒருவர் கத்தியால் மக்களைத் தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
சீனாவின் Shanghai நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில், ஒருவர் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்துவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.
திபுதிபுவென மருத்துவமனைக்குள் நுழைந்த பொலிசார், கத்தியால் குத்தப்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்திருப்பதையும், மர்ம நபர் ஒருவர் ஏராளம் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்திருப்பதை அறிந்துள்ளனர்.
அந்த நபர் பொலிசாரைக் கண்டதும், தான் பிடித்து வைத்திருப்பவர்களை கொல்லப்போவதாக மிரட்டியுள்ளார். உடனே பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். அவர் கொல்லப்பட்டாரா அல்லது காயங்களுடன் பிடிபட்டாரா என்பது தெரியவில்லை.
சமூக ஊடகங்களில், மருத்துவர்களும் நோயாளிகளும் உயிர் தப்ப ஓடும் காட்சிகளும், தரையில் இரத்தம் சிந்திக் கிடப்பதைக் காட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
சீனாவைப் பொருத்தவரை இதுபோல் திடீரென பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அபூர்வம் என்றாலும், சமீப காலமாக மருத்துவமனைகளில் இதுபோல் தாக்குதல்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.
அதற்குக் காரணம் மருத்துவமனைகளில் காணப்படும் ஊழல். மக்கள் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்குக் கூட லஞ்சம் கொடுக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. அத்துடன், மக்கள் மருத்துவர்களை சந்திக்க நீண்ட வரிசைகளில் நிற்கும் நிலையும் காணப்படுகிறது.
ஆக, இது அவ்வகையில் பாதிக்கப்பட்டவர் ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தெரியவில்லை!