கூகுள் ஊழியர்கள் 200 பேர் சேர்ந்து உருவாக்கியுள்ள புதிய தொழிலாளர் சங்கம்
அமெரிக்கா மற்றும் கனடாவில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட கூகிள் ஊழியர்கள் இணைந்து ஒரு தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளனர். இதற்கு "Alphabet Workers Union" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கூகுள் இன்ஜினியர்கள் பருல் கோவுல் மற்றும் செவி ஷா ஆகியோர் இச்சங்கத்தின் நிர்வாகத் தலைவராக மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆல்பாபெட் தொழிலாளர் சங்கம், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நியாயமான ஊதியத்துடனும், துஷ்பிரயோகம் செய்யப்படுவோம் - பாகுபாடு காட்டப்படுவோம் என்ற பயமில்லாமலும் பணியாற்றுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இதுவரை 226 ஊழியர்கள் அமெரிக்காவின் மிகப்பெரிய தகவல்தொடர்பு மற்றும் ஊடக தொழிற்சங்கமான Communications Workers of America-வுடன் இந்த ஆல்பாபெட் தொழிலாளர் சங்க அட்டைக்கு கையெழுத்திட்டுள்ளனர்.
பல வளரும் தொழிற்சங்கங்களைப் போலல்லாமல், புதிதாக அமைக்கப்பட்ட இந்த தொழிலாளர் சங்கம் "எந்த நேரத்திலும் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்து ஆல்பாபெட்டுடன் கூட்டுப் பேரம் பேச எதிர்பார்க்கவில்லை.
மாறாக, எதிர்கால ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்க இன்னும் முறையான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என இச்சங்கத்தின் நிர்வாகத் தலைவர் பருல் கோவுல் தெரிவித்துள்ளார்.