கனடாவில் பரவும் புதுவகை கொரோனா வைரஸ்... சில தகவல்கள்
ஏற்கனவே பலவகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் கனடாவில் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், புதிதாக ஒருவகை வைரஸ் அவற்றுடன் இணைந்துகொண்டுள்ளது.
ஆம், லாம்டா வகை கொரோனா வைரஸ் என்னும் திடீர் மாற்றம் பெற்ற ஒரு வைரஸ், சிறிய அளவில் கனடாவில் கண்டறியப்பட்டு வருவதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த லாம்டா வைரஸ் முதன்முதலில் தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஜூலை 5 நிலவரப்படி, இதுவரை கனடாவில் 11 பேருக்கு இந்த லாம்டா வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த லாம்டா வைரஸின் பிரச்சினை என்னவென்றால், அது தன்னகத்தே பலவகை திடீர் மாற்றங்களைக் கொண்டுள்ளது. அதனால் அது எளிதில் தொற்றக்கூடிய ஒன்றாகவும், ஆன்டிபாடிகளால் செயலிழக்கச் செய்யப்பட இயலாததாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது.
கொஞ்சம் நிம்மதியளிக்கும் விடயம் என்னவென்றால், இந்த லாம்டா வைரஸிடமிருந்து தடுப்பூசிகள் உங்களைக் காப்பாற்றும் என்பதுதான்.
ஆகவே, நீங்கள் தடுப்பூசி பெற்றிருந்தால், இந்த வைரஸைக் குறித்துக் கவலைப்படவேண்டியதில்லை, குறைந்தபட்சம் இப்போதைக்காவது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.