16 வயதில் செய்த கொடூர செயல்: 9 ஆண்டுகள் கழித்து ஆதாரத்துடன் சிக்கிய நபர்!
2011-ஆம் ஆண்டில் ஒரு கல்லூரி பேராசிரியரை கத்தியால் குத்தி கொன்றதற்காகவும் அவரது மனைவியை இருபதுக்கும் மேற்பட்ட முறை கத்தியால் காயங்களை ஏற்படுத்தியதற்காகவும், அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தைச் சேர்ந்த இளைஞருக்கு 115 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது 25 வயதாகும் வின்ஸ்டன் ஏர்ல் கார்பெட் எனும் இளைஞருக்கு கடந்த திங்களன்று எல்கார்ட் சர்க்யூட் நீதிமன்றத்தில், கொலைக்காக 65 ஆண்டுகளும், கொலை முயற்சிக்காக 50 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், கார்பெட் இந்த குற்றங்களை செய்தபோது அவருக்கு வயது 16.
2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோஷன் கல்லூரியின் உயிரியல் பேராசிரியர் ஜேம்ஸ் மில்லர் மற்றும் அவரது மனைவி லிண்டா ஆகியோர் வீட்டில் தனியாக இருந்ததுள்ளனர்.
அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த கார்பெட், முதலில் லிண்டாவை கத்தியால் 23 முறை குத்தியுள்ளார், தாக்குதலை தடுக்க முயன்ற மில்லரையும் கத்தியால் குத்தியுள்ளார்.
இருப்பினும் ஒரு வழியாக கார்பெட்டை விரட்டியடித்த மில்லர், வீட்டின் வெளியே மயங்கி விழுந்த நிலையில் இறந்துள்ளார்.
பல ஆண்டுகளாக இந்த வழக்கில் சந்தேகத்துக்கு உட்பட்ட நபர் குறித்த துப்புகள் கிடைக்காமல் இருந்துள்ளது. கார்பெட்டும் தனது உயர் கல்வியை முடித்து விட்டு இரண்டு ஆண்டுகள் கடற்படையில் பணியாற்றத் தொடங்கியுள்ளார்.
இந்த வழக்கில் கிடடத்தட்ட 7 ஆண்டுகளாக குற்றவாளியை கண்டுபிடிக்காத நிலையில், சம்பவ இடத்தில் கிடைத்த இரண்டு டி.என்.ஏ ஆதாரங்களைக் கொண்டு, தொடர்ந்து தேடுதல் நடத்தப்பட்டது. பின்னர், கார்பெட்டின் குடும்பத்தினர் சிலரது டி.என்.ஏக்கள் ஒத்துப்போனதைத் தொடர்ந்து, கடந்த 2018 ஆண்டு சந்தீகத்தின் பேரில் கார்பெட்டை பொலிஸார் கைது செய்தனர்.
இருப்பினும், தனது டி.என்.ஏக்கள் எப்படி அங்கு இருந்தது என தனக்கு தெரியாது என்றும் அந்த வீட்டுக்கு சென்றதே இல்லை என்றும் குற்றத்தை ஏற்க மறுத்தார்.
இந்த வழக்கில், சம்பவம் நடந்து 9 ஆண்டுகள் கழித்து கார்பெட் தான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.