மருந்தாளரின் அலட்சியத்தால் வீணடிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட டோஸ்கள்: அந்த மருந்திலிருந்து தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களின் நிலை என்ன?
அமெரிக்காவில் விஸ்கான்சின் மருத்துவமனை மருந்தாளர் ஒருவர், இந்த வாரத் தொடக்கத்தில் 57 மருந்து குப்பிகளை குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்காமல் வெளியே வைத்துவிட்டார்.
இதனால், மருந்துகளை பொறுப்பற்ற முறையில் வீணடித்ததற்காக, கடந்த வியாழக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். மேலும், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு குப்பியும் 10 டோஸ்களை உள்ளடக்கியது. அதாவது 570 கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்களை அவர் நாசப்படுத்தியுள்ளார்.
இதில் சிக்கல் என்னவென்றால், இவை முறையாக குளிரூட்டப்பட்ட பெட்டியில் சேமிக்கப்படவில்லை என தெரியவருவதற்குள், இந்த மருந்துகளிலிருந்து கிட்டத்தட்ட 60 டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. பிறகு, மீதமுள்ள 500க்கும் மேற்பட்ட டோஸ்கள் நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சரியான வெப்ப நிலையில் சேமிக்கப்படாத இந்த மருந்தால், இதனை செலுத்திக்கொண்டவர்களுக்கு என்ன ஆகும் என்ற அச்சம் எழுந்தது.