இந்த கிராமத்தில் மதுபானம் இன்றி திருமணம் நடத்தினால் ரூ.21,000 பரிசுத்தொகை
மது இல்லாமல் திருமணம் நடத்தினால் ரூ.21 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
பரிசுத்தொகை அறிவிப்பு
தற்போதைய காலத்தில் சுப நிகழ்ச்சிகள் என்றாலும், துக்க நிகழ்ச்சிகள் என்றாலும் மது பானங்கள் இல்லாமல் நடைபெறுவதே இல்லை. அதுவும், திருமண நிகழ்ச்சிகளில் டிஸ்க் ஜாக்கி எனப்படும் டி.ஜே. இசை நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்திய மாநிலமான பஞ்சாப், பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம ஊராட்சியில் புதியதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, திருமணங்களில் மது விருந்து கலாச்சாரத்தை கட்டுப்படுத்த புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது.
இது தொடர்பாக ஊராட்சி தலைவரான சர்பாஞ்ச் அமர்ஜித் கவுர் கூறுகையில், "திருமண நிகழ்ச்சிகளில் வீண் செலவுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும், மது அருந்துவதை தடுக்கவும் இந்த முயற்சியை எடுத்துள்ளோம்.
திருமண நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாறுவதில் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. இதனால், தேவையில்லாத பகை ஏற்படுகிறது. மேலும், டி.ஜே. இசை வைக்கப்படுவதால் அதிக சத்தத்தால் மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது.
இதனால் திருமண நிகழ்ச்சிகளில் மதுபான விருந்து இல்லாமலும், டிஜே இசையை இசைக்காமலும் இருந்தால் திருமண வீட்டாருக்கு ரூ.21 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |