5 வருடங்களுக்கு தேட வேண்டாம்.. தவறான முடிவு எடுக்க மாட்டேன் என நீட் தேர்வு எழுதிய மாணவர் மாயம்
நீட் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் 5 வருடங்களுக்கு தேட வேண்டாம் என்றும், தவறான முடிவு எடுக்க மாட்டேன் என்றும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மாயமாகியுள்ளார்.
நீட் தேர்வு எழுதிய மாணவர்
இந்திய மாநிலமான ராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் நுழைவுத் தேர்வு, ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இங்கு வந்து பயிற்சி பெறுகின்றனர். ஆனால், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தானின் கங்காபூர் நகரைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் மீனா என்ற 19 வயது இளைஞர் இங்குள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு 3 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்தார். பின்னர், கடந்த 5-ம் திகதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை எழுதினார்.
குறுஞ்செய்தி அனுப்பி மாயம்
இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மறுநாள் 6 -ம் திகதி ராஜேந்திர பிரசாத் மீனாவை காணவில்லை. இவர், விடுதி உரிமையாளரிடம் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிற்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக தனது பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதில் அவர், தான் மேற்கொண்டு படிக்க விருப்பமில்லை என்றும் 5 வருடங்களுக்கு தன்னை தேட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு, தன்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், எந்த தவறான முடிவையும் எடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |