4 ஜேசிபி டயர்களை தோளில் சுமந்து நடக்கும் இரும்பு தமிழர்.., அமெரிக்க போட்டிக்காக விடாமுயற்சி
அமெரிக்காவில் நடைபெற இருக்கும் சாதனை நிகழ்ச்சிக்காக தமிழக வீரர் 4 ஜேசிபி டயர்களை சுமந்தபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக வீரர் கண்ணன்
தமிழக மாவட்டமான கன்னியாகுமரி, நாகர்கோவில் அருகே தாமரை குட்டி விளையை சேர்ந்தவர் கண்ணன் (42). இவர், அதிக அளவிலான எடையுள்ள பொருட்களை தூக்கி சாதனை புரிந்து வருகிறார்.
அந்தவகையில், இந்திய அளவில் வலுவான மனிதர் என்பதை நிரூபிப்பதற்கான இரும்பு மனிதர் என்ற பட்டத்தை வென்றுள்ளார். முன்னதாக, பஞ்சாபில் நடந்த உலக இரும்பு மனிதன் போட்டியில் வென்று வெள்ளி பதக்கத்தை பெற்றார்.
ஸ்பெயினில் நடைபெற்ற அர்னால்டு கிளாசிக் உலக இரும்பு மனிதன் போட்டியில் தனது திறமையை வெளிக்காட்டினார். மேலும், சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் அதிக பளுவை தூக்கியதன் காரணமாக 4 முறை இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்க போட்டி
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற இருக்கும் உலக இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்கும் விதமாக மும்பையில் 'இந்தியா காட் டேலண்ட்’ போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வீரர் கண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக கண்ணன், நாகர்கோவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 4 ஜேசிபி டயர்களை தோளில் தூக்கியபடி 30 மீட்டர் தூரம் நடந்தார். அதோடு 2 டயரை தலைக்கு மேல் தூக்கியபடி படிக்கட்டிலும், கடற்கரையில் நடந்து சென்றும் பயிற்சி மேற்கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |