புலம்பெயர்தலுக்கெதிராக ஒன்றிணையும் ஐரோப்பா: பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்ய அழைப்பு
உலக அரசியலில் சமீப காலமாக புலம்பெயர்தல் முக்கிய பேசு பொருளாகிவருகிறது. கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி என பல நாடுகள் புலம்பெயர்தலுகெதிராக நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகள் இணைந்து புலம்பெயர்தலுகெதிராக நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் பிரித்தானியாவையும் இணைத்துக்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள ஜேர்மனியும் பிரான்சும் அழைப்பு விடுத்துள்ளன.
பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்ய அழைப்பு
பிரித்தானியாவில் கேய்ர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய அரசு அமைந்ததுமே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளைத் துவக்கியுள்ளது பிரித்தானியா.
இப்படிப்பட்டதொரு சாதகமான சூழலில், புலம்பெயர்தல் மற்றும் புகலிடம் தொடர்பில், ஐரோப்பா முழுமைக்குமான ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானியாவுடன் செய்துகொள்ள பிரான்சும் ஜேர்மனியும் அழைப்பு விடுத்துள்ளன.
இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய உள்துறை விவகாரங்கள் ஆணையருக்கு ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸரும், பிரான்ஸ் உள்துறை அமைச்சரான ஜெரால்ட் டார்மனினும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.
பிரெக்சிட், புலம்பெயர்தல் கொள்கைகளின் ஏகோபித்த ஒத்துழைப்பை பாதித்துவிட்டதாகக் கூறியுள்ள அவர்கள், ஆகவே, பிரித்தானியாவுக்கும் ஷெங்கன் பகுதிகளுக்குமிடையிலான புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சியை தீவிரமாக முன்னெடுக்குமாறு ஐரோப்பிய ஆணையத்தை வலியுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |