ஓடும் ரயிலுக்கடியில் மயங்கிச் சரிந்த இளம்பெண்... மறுபிறவி எடுத்து வரும் ஆச்சரிய காட்சி
அர்ஜெண்டினாவில் திடீரென மயக்கம் ஏற்பட்டதால் ஒரு இளம்பெண் ஓடும் ரயிலுக்கடியில் விழுந்த திகில் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
அர்ஜெண்டினாவிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் Candela என்ற இளம்பெண் ரயிலுக்குக் காத்திருக்கும்போது, திடீரென அவரது இரத்த அழுத்தம் குறைந்துள்ளது.
அவர் தடுமாறி முன்னோக்கிச் சரிய, அப்போது ரயில் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்த ரயில் ஒன்றின் இரண்டு பெட்டிகளுக்கு நடுவே அவர் சென்று விழுவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
அதிர்ச்சியில் அங்கு நின்ற பலரும் கைகளால் முகத்தை மூடிக்கொள்ள, உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
உடனே அங்கிருந்தவர்கள் தண்டவாளத்தில் குதித்து அந்தப் பெண்ணை தூக்கியிருக்கிறார்கள்.
அதற்குள் ஆம்புலன்ஸ் வர, மருத்துவ உதவிக்குழுவினர் அவரை பரிசோதித்துவிட்டு, அவரை சக்கர நாற்காலி ஒன்றில் வைத்து அழைத்துச் செல்கிறார்கள்.
ஆச்சரியம் என்னவென்றால், ரயில் பெட்டிகளுக்கிடையே விழுந்த அவர் ரயில் சக்கரங்கள் ஏறி உயிரிழந்திருப்பார் என மக்கள் அஞ்சி நிற்க, அவரோ உயிருடன் மீட்கபட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல், அவர் சுயநினைவுடன் சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துச் செல்லப்படுவதைக் கண்ட மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
பின்னர் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த Candela, என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்னமும் உயிருடன் இருக்கிறேன். என்ன நடந்தது என யோசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார்.
நடந்ததை நேரில் பார்த்த சகப் பயணி ஒருவரோ, அந்தப் பெண் மறுபிறவி எடுத்துள்ளார், அது ஒரு அற்புதம் என்கிறார்.