நவம்பர் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
இந்தியாவில் வரும் நவம்பர் மாதத்தில் ஆதார் புதுப்பிப்பு, ஓய்வூதியம், SBI பணப்பரிவர்த்தனை கட்டணம் உள்ளிட்டவற்றில் விதி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
ஆதார் புதுப்பிப்பு
முன்னதாக ஆதாரில் முகவரி தவிர்த்து, பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்ய ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இனிமேல் அதனை வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ளலாம்.
இந்த விவரங்களை மாற்றம் செய்ய எந்த கூடுதல் ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய தேவை இல்லை. UIDAI அமைப்பு, பான் கார்டு, பாஸ்போர்ட் பிறப்பு சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்கள் மூலம் அதுவாகவே சரிபார்த்துக்கொள்ளும்.

அதேவேளையில், கைவிரல் ரேகை, கருவிழி, புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்ற, வழக்கம் போல் ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும்.
அதேபோல், பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை மாற்றுவதற்கு ரூ.50 கட்டணமாக இருந்த நிலையில், தற்போது ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கைவிரல் ரேகை, கருவிழி, புகைப்படம் ஆகியவற்றை மாற்றுவதற்கு ரூ.100 கட்டணமாக இருந்த நிலையில், தற்போது ரூ.125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு
புதிய விதிப்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கிற்கு 4 நாமினிகளை சேர்த்துக்கொள்ளலாம். இது அவசர காலங்களில் நிதியை சட்டபூர்வ வாரிசுகளுக்கு எளிதாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த, தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களை (ஜீவன் பிரமான்) நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய முறையிலிருந்து (NPS) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
SBI கார்டு
CRED, MobiKwik போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் வழியாக SBI கார்டு வைத்து பள்ளி/கல்லூரி கட்டணங்களை செலுத்தினால், பரிவர்த்தனை தொகையில் 1% கட்டணம் வசூலிக்கப்படும்.
பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்திலோ அல்லது அவர்களின் POS இயந்திரம் மூலம் நேரடியாக பணம் செலுத்ததினால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |