கலவரம் வரும் என காவல்துறை எச்சரித்தது - ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு விசாரணையை தற்போது சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தவெக பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதில் பேசிய அவர், "தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவருடைய சுற்றுப்பயணம் மிகப்பெரிய எழுச்சியாக உருவானது. இது முதல் கூட்டம் கிடையாது. திருச்சி, நாமக்கல், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் என பல ஊர்களுக்கு செல்லும்போது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத எழுச்சியை மக்கள் உருவாக்கினர்.
எந்த மாவட்டத்திலும் காவல்துறை எங்களுக்கு ஆதரவு வழங்கியது இல்லை. அரியலூரில் மட்டும் வழங்கினார்கள். பெரம்பலூர் எஸ்.பி எங்களுக்கு கடைசி நேரத்தில் பல தகவல்களை வழங்கியதால் கூட்டத்தை ரத்து செய்தோம்.
விஜய் தாமதாமாக வரவில்லை
எங்கள் தலைவர் விஜய் தாமதாமாக வந்ததாக அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். ஆனால் காவல்துறை வழங்கிய 3 முதல் 10 மணி என்ற நேரத்திற்கு உள்ளே தான் வந்தார்.
எங்களுடைய நேரலை அனைத்து ஊடகங்களிடமும் உள்ளது. தலைவர் எப்போது வந்தார் என்பது அதில் உள்ளது. கரூர் காவல்துறையினர் எங்களை மாவட்ட எல்லையிலே வரவேற்றார்கள். இது எந்த மாவட்டத்திலும் நடக்கவில்லை.
நிகழ்வு ஏற்பாட்டில் தவறு இருந்தால் காவல்துறை ஏன் எங்களை வரவேற்க வேண்டும் என்பது முதல் கேள்வி. காவல்துறையினர் எங்கு நிறுத்த சொல்லி பேசினார்களோ அங்கு நிறுத்திதான் விஜய் பேசினார்.
எல்லாம் சரியாக உள்ளதா என கேட்ட பின்னரே பேச தொடங்கினார். மக்களைப் பார்த்துத்தான் பேசினார். தண்ணீர் கேட்டவர்களுக்கு அவர் கையாலேயே தண்ணீர் கொடுத்தார். ஆம்புலன்சுக்கு அவரே வழிவிட சொன்னார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேச்சை முடித்துவிட்டு கிளம்பினார்.
பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நாங்கள் கரூர் எல்லையில் தான் இருந்தோம். நீங்கள் உள்ளே இருந்தால் கலவரம் வரும் என காவல்துறையினர் கூறியதால் தான் வெளியேறினோம்.
எல்லாரும் சொல்வது போல் தப்பித்து ஓடவில்லை. அதன் பின்னர் எங்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்களை காவல்துறை அடித்து விரட்டியது. ஒருவாரம் விடுமுறை என்பதால் நீதிமன்றத்தை நாட முடியவில்லை" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |