இந்தியாவில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவ காப்பீடு
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு வழங்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கான ஒப்புதல் கடந்த 11ம் திகதி வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 4.5 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும், ஒரு குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
இதற்காக மூத்த குடிமக்களுக்கு புதிய அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்தாலும் ஐந்து லட்ச ரூபாய் பகிர்ந்து வழங்கப்படும் என்றும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன்பெறாத குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் இணையலாம் என கூறப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்றும், சிகிச்சைக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மூத்த குடிமக்களின் சமூகப்பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்புக்கான முக்கிய நடவடிக்கை இதுவாகும் என தெரிவித்துள்ளார்.