எவரெஸ்ட் இரட்டையர்கள்... சுவிட்சர்லாந்தில் சாதித்த இந்திய இளம்பெண்கள்
எவரெஸ்ட் இரட்டையர்கள் என்று அழைக்கப்படும் இந்திய மலையேற்ற வீராங்கனைகளான தாஷி மாலிக் மற்றும் நுங்ஷி மாலிக் ஆகியோருக்கு சுவிஸ் ஆல்ப்ஸ் மலையேற்றத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில், சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளார்கள் இருவரும்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மகளிர் மட்டும் மலையேறும் ஒரு சவாலுக்காக சுவிஸ் ஆல்ப்ஸ் மலையிலுள்ள 13,000 அடி உயரத்திலிருக்கும் இரண்டு சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்கள் இருவரும்.
சவாலின் ஒரு பாகமாக தாஷி மாலிக் மற்றும் நுங்ஷி மாலிக் ஆகிய இருவரும் Mount Breithorn (13,662 அடி) மற்றும் Allalinhorn (13,212 அடி) என்னும் சிகரங்களில் வெற்றிகரமாக ஏறியுள்ளார்கள்.
இந்தியா மற்றும் இந்தியப் பெண்கள் சார்பாக எங்களை இந்த மலையேறும் சவாலுக்கு அழைத்ததற்காக சுவிட்சர்லாந்துக்கு நன்றி என்று கூறும் நுங்ஷி, ஆல்ப்ஸ் மலை சிகரங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். எப்போது அந்த சிகரங்களைத் தொடுவோம் என கனவும் கண்டிருக்கிறோம். அவை எங்களை ஏமாற்றிவிடவில்லை என்கிறார்.
இதுதான் நாங்கள் சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் ஏறும் முதல் முறை என்று கூறும் தாஷி, இங்குள்ள மலைப்பகுதி இமயமலையில் உள்ளதைவிட வித்தியாசமாக இருக்கிறது. ஆனால், அது மிக அருமையான சாகசமாக இருந்தது. மலை உச்சியிலிருந்து நாங்கள் கண்ட காட்சியின் அழகு எங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டது என்கிறார்.
இந்த சவாலில் உலகின் பல பாகங்களிலிருந்து 400க்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டுள்ளார்கள். அவர்களில் பலர் இதற்கு முன் இவ்வளவு உயர சிகரங்களில் ஏறியவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.