ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்: புதிய காவல் ஆணையர் முடிவு
ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்று சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
புதிய காவல் ஆணையர்
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை காவல்துறையின் புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சட்டம் ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டார்.
அருண் பேசியது
இந்நிலையில் புதிய காவல் ஆணையர் அருண் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது தான் என்னுடைய முதற்கட்ட பணி ஆகும்.
காலம் காலமாக குற்றம் நடைபெற்று கொண்டு தான் வருகின்றது. அதை தடுத்து கொண்டு தான் வருகிறோம். குற்ற செயல்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்.
காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செய்தாலே குற்றங்கள் குறையும். ஆம்ஸ்ட்ராங் வழக்கு பற்றி கருத்து கூற முடியாது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |