இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அல்லு அர்ஜுன்.., காலையில் விடுவிப்பு
பெண் உயிரிழந்த விவகாரத்தில் இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அர்ஜுன் ஜாமீன் பெற்றதையடுத்து காலையில் விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வந்தார்
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் வெளியானது. இதனால், திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அப்போது, நடிகர் அல்லு அர்ஜுன் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புடன் திரையரங்கிற்கு வந்துள்ளார்.
அங்கு, அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திரையரங்கின் இரும்பு கேட் சரிந்து விழுந்து பலரும் கீழே விழுந்தனர்.
அதில், 35 வயதுடைய பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். அவருடைய மகனுக்கு படுகாயமும், கணவருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
இதையடுத்து, பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்திற்கு முறையான ஏற்பாடுகளை திரையரங்கு நிர்வாகத்தினர் செய்யவில்லை என்றும், நடிகர் அல்லு அர்ஜுன் முன்னறிவிப்பு இன்றி தியேட்டருக்கு வந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் பொலிஸார் கூறினர்.
பின்னர், காவல் துறை தரப்பில் நடிகர் அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள், திரையரங்கு நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, திரையரங்கு உரிமையாளர், மேலாளர், ஊழியர் என மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.
அதேபோல, தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில், நேற்று ( டிச 13) ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்ற பொலிஸார் அவரை கைது செய்தனர். பின்னர், அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி அவர் தெலங்கானாவில் உள்ள சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, ஜாமீன் வழங்கக்கோரி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறி இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இருந்தாலும் முறையான ஜாமீன் ஆவணங்கள் கிடைக்காததால் சிறை அதிகாரிகள் அவரை வெளியில் அனுப்ப மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச 14) காலை 7 மணியளவில் சிறையில் இருந்து வெளியே விடுவிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |