116 நாய்களுக்கும் தனி அறை - நாய்களுக்காக ரூ.45 கோடி சொத்தை வழங்கிய பிரபல நடிகர்
நடிகர் ஒருவர் நாய்களுக்காக தனது ரூ.45 கோடி சொத்தை வழங்கியுள்ளார்.
தெருநாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு
சமீபகாலமாக சாலைகளில் செல்லும் சிறுவர் சிறுமி உட்பட பொதுமக்களை தெரு நாய்கள் கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றாலும், ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டெல்லி - என்சிஆர் பகுதிகளில் உள்ள 10 லட்சம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, காப்பகத்தில் அடைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு விலங்கு நல ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், அரசிடம் நாய்களை அடைக்க காப்பகம் இல்லை. ஒரே இடத்தில் நாய்கள் அடைக்கப்படும் போது உணவுக்காக சண்டையிட்டு உயிரிழக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்.
மேம்போக்கான வாதங்களை வைக்க வேண்டாம் என தெரிவித்துள்ள நீதிபதிகள், "8 வாரங்களில் நாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும், கருத்தடை தடுப்பூசி போட நிபுணர்களை பணியமர்த்த வேண்டும், நாய்கள் வெளியே வராதபடி சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும், நாய்க்கடித்தால் புகார் அளிக்க தனி ஹெல்ப்லைன் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
மிதுன் சக்கரவர்த்தி
இந்நிலையில், பிரபல நடிகர் ஒருவர், நாய்களுக்காக தனது ரூ.45 கோடி சொத்தை ஒதுக்கியுள்ளார்.
74 வயதான நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 350 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன் ஆகியோரின் நடிப்பில் தமிழில் வெளியான 'குரு' படத்தில் மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மூலம் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்ட இவர், அதன் பின்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாஜகவில் இணைந்தார்.
நாய்களுக்கு ரூ.45 கோடி
இவருக்கு ரூ.400 கோடிக்கு அதிகமாக சொத்து உள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் ரூ.45 கோடியை நாய்களுக்காக ஒதுக்கியுள்ளார்.
நாய் பிரியரான இவர், 116 நாய்களை வளர்த்து வருகிறார். எங்கு சென்றாலும் அங்குள்ள நாட்டு நாய்களை வாங்கி வந்து விடுவார்.
இந்த நாய்களுக்காக மும்பையின் மட் தீவில் 1.5 ஏக்கரில் பண்ணை வீடு ஒன்றை உருவாக்கியுள்ளார். இதில் ஒவ்வொரு நாய்களுக்கும் தனி தனி அறை உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நாய்களை பராமரிப்பதற்கு பணியாளர்கள், மருத்துவ வசதி மற்றும் விளையாடுவதற்கு தனி பகுதிகள் என இங்குள்ள நாய்களுக்கு ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தெரு நாய்களையும் தத்தெடுத்து வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |