நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி: தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி
பிரபல நடிகர் ரஜினிகாந்த் உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ரஜினிகாந்த், நேற்று இரவு 10.00 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு எதுவும் ஏற்படவில்லை என்றும், ஏற்கனவே திட்டமிடப்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின்பேரில்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பயப்படும்படியாக எதுவும் இல்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
என்ன பிரச்சினை?
ரஜினிகாந்த் நேற்று இரவு படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய நிலையில், அவருக்கு உடல் சோர்வு மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் தொடர்ச்சியாக ஓய்வின்றி திரைப்படங்களில் நடித்துவருவதால் சில நாட்களாகவே அவருக்கு உடல் சோர்வு மற்றும் லேசான நெஞ்சு வலி போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், அதற்காக மருத்துவர்களை அவர் கலந்தாலோசித்ததாகவும், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று அவருக்கு இதய சிகிச்சைப்பிரிவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகுதான் அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன், அடிவயிற்று பகுதியில் அவருக்கு லேசான வீக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 1, 2024
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது சமூக வலைதளப்பக்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |