தினகரன் கட்சியில் இருந்த நடிகர் செந்தில் வேறொரு கட்சியில் இணைந்தார்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிமுக மற்றும் அமமுக கட்சியில் இருந்த பிரபல திரைப்பட நடிகரான செந்தில், இன்று பாஜக-வில் இணைந்தார்.
தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் செந்தில், நடிப்பில் மட்டுமின்றி, அரசியலிலும் களம் இறங்கிய இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக-வில் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார்.
ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், கட்சிப் பணிகளில் ஈடுபாடு இல்லாத காரணத்தினால், செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இவர் இன்று பாஜக-வில் இணைந்தார்.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் இணைந்தார். அப்போது கூறிய அவர் 1988-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் தனக்கு உரிய இடம் கிடைத்தது.
அவரது மறைவைத் தொடர்ந்து தற்போது நல்ல கட்சியில் இணைய வேண்டும் என்கிற அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கிறேன்.
இனி பாஜக நல்ல முறையில் வளரும். மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். தலைமை கூறினால் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று கூறினார்.
