மனைவி குஷ்பு பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும்.., அவருக்கு பதில் களமிறங்கிய சுந்தர்.சி
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இயக்குநர் சுந்தர்.சி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு எலும்பு முறிவு சிகிச்சையைக் காரணம் காட்டி பிரச்சாரம் செய்ய இயலாது என்று விலகினார். இதனால், அவருக்கு பதில் கணவர் சுந்தர்.சி பிரச்சாரம் செய்தார்.
சுந்தர்.சி பரப்புரை
அந்தவகையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து சுந்தர்.சி நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், "புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பதவியில் இல்லாத போதிலும் கூட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார். நீங்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
நீங்கள் வாக்களித்து டெல்லி நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது ஒரு எம்பியை அல்ல, மத்திய அமைச்சரை தான். அது நமது கடமை. அதனால் தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள்" என்றார்.
பின்னர், அங்கு கூடியிருந்தவர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது அவர், மறக்காமல் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |