வில்லங்கத்தில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா! பல மணிநேரமான விசாரிக்கும் அமலாக்கத்துறை
நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று (புதன்கிழமை) காலை முதல் பல மணிநேரங்களாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லைகர் திரைப்படம்
விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்படத்தை இயக்கிய பூரி ஜெகன்நாதுடன் இணைந்து நடிகை சார்மி கவுரும் படத்தை தயாரித்து இருந்தார். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்திருந்தார்.
100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இப்படம், அதன் பட்ஜெட்டில் 30 சதவீதத்தை கூட வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்த இப்படத்தால் நடிகர் விஜய் தேவரகொண்டா கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
ஹவாலா பணம் முதலீடு
இதனிடையே, இப்படத்தில் வெளிநாட்டில் இருந்து ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, இந்த புகார் தொடர்பில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக இப்படத்தின் தயாரிப்பாளர்களான பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விஜய் தேவரகொண்டா விசாரணை
அதைத்தொடர்ந்து, இப்படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவும் விசாரணைக்கு ஆஜராகுமாரு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இன்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் இன்று காலை 8.30 மணி முதல் விசாரணை மேற்கொண்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் லைகர் படத்தின் படுதோல்வி குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படத்தில் ஹவாலா பணத்தை முதலீடு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.