நடிகை சாய் தன்ஷிகாவுடன் திருமணம்: திகதியை அறிவித்த நடிகர் விஷால்
பிரபல நடிகர் விஷால் பட விழா ஒன்றில் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்வதாக அறிவித்தார்.
விஷால் திருமணம்
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். 47 வயதாகும் இவர் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பின்னர்தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறி வந்தார்.
இந்த நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவை நடிகர் விஷால் திருமணம் செய்துகொள்ளப்போவதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் 'யோகிடா' என்ற படத்தின் விழா மேடையில் வைத்து, "நானும் விஷாலும் காதலிக்கிறோம். 15 ஆண்டுகளாக நட்பில் இருந்தோம். அதன் பின் பேச தொடங்கியபோது இது திருமணத்தில்தான் முடியும் என்று இருவருக்கும் தோன்றியது, அதனால் முடிவெடுத்துவிட்டோம்.
ஆகத்து 29ஆம் திகதி விஷாலின் பிறந்தநாள். அன்றைய தினமே எங்கள் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக ஆகத்து 15ஆம் திகதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது" என சாய் தன்ஷிகா கூறினார்.
சிரித்த முகத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்
அதேபோல் நடிகர் விஷாலும், "தன்ஷிகாவை வாழ்நாள் முழுக்க இதேபோல சிரித்த முகத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்" என தெரிவித்தார்.
இவர்களது அறிவிப்பைத் தொடர்ந்து திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |