அவர் மீது தவறில்லை, மாணவிகள் தான் பலிகடா! கலாஷேத்ரா விவகாரம் குறித்து கொந்தளித்த தமிழ் நடிகை
கலாஷேத்ரா விவகாரத்தில், சில ஆசிரியர்களின் தூண்டுதலால் தான் மாணவிகள் போராட்டத்தில் இறங்கியதாக நடிகை அபிராமி குற்றம்சாட்டியுள்ளார்.
போராட்டத்தில் குதித்த மாணவிகள்
சென்னையில் கலாஷேத்ரா நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியைகள் சிலர் மாணவ, மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
ஏராளமான மாணவிகள் போராட்டத்தில் இறங்கியதைத் தொடர்ந்து, நடனப் பிரிவில் பணியாற்றிய ஆசிரியர் ஹரி பத்மன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நடிகை அபிராமி
இந்த நிலையில் கலாஷேத்ரா பயின்ற முன்னாள் மாணவியும், நடிகையுமான அபிராமி இந்த விவகாரம் தொடர்பாக சில ஆசிரியைகள் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
மாணவிகள் தூண்டப்படுவதாக கூறியுள்ள அவர், பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து அரசியல் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் பேசிய அபிராமி, 'நான் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி. அங்கு பயின்ற வரை ஹரி பத்மன் எந்தவித பாலியல் தொல்லைகளையும் செய்யவில்லை. எப்போதும் ஒரு பிரச்சனையில் ஒருதரப்பு விளக்கத்தை மட்டுமே கேட்டுவிட்டுப் பேசக்கூடாது.
89 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் இப்படியொரு பிழையைச் சொல்லும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் தரப்பை பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. நாங்கள் பெருமையாகப் பார்த்த ஆசிரியர்களை மிகவும் இழிவுபடுத்திப் பேசுகிறார்கள்.
பாலியல் துன்புறுத்தலோ அல்லது எந்தப் பிரச்சனையாகவோ இருந்தாலும் அது நடந்த நேரத்தில் வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும். தவறு நடக்கிறது என்றால், அந்த நேரத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதைச் செய்யாமல், நான் பயந்துட்டேன் என்று சொல்வது சரியல்ல. நாம் சொல்வதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். நாம் சொல்வது உண்மையாக இருந்தால், எதற்கும் பயப்படத் தேவையில்லை' என தெரிவித்துள்ளார்.