இப்படி செஞ்சா நாங்க எப்படி ஓட்டு கேட்க முடியும்? அப்செட்டான நடிகை நமீதா: கையெடுத்து கும்பிட்ட கணவர்
பிரபல திரைப்பட நடிகையான நமீதாவின் கணவர், தங்களை வேட்பாளர் இன்றி அழைக்க வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு பேசும் வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சியால் கொடி கட்டி பறந்த நடிகை நமீதா, தன்னுடைய மார்க்கெட் மெல்ல மெல்ல குறைந்த பின், அரசியலில் காலடி பதித்தார்.
தற்போது பாஜக-வில் இருக்கும் நமீதா, தமிழக சட்டமன்ற தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், நமீதா இன்று ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குப்புராமுக்கு ஆதரவாக ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன் படி காலை 9 மணிக்கு அங்கிருக்கும் பிரபல மருதுபாண்டி சிலை அருகே நமீதா பிரச்சாரம் செய்யவிருந்தார்.
ஆனால், அங்கு வேட்பாளர் வராத காரணத்தினால், அங்கு பிரச்சாரத்தை ரத்து செய்த அவர், இரண்டாவதாக அங்கிருக்கும் மக்கள் கூடும் தேவர் சிலை மற்றும் பத்திரப் பதிவு அலுவலகம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அங்கும், வேட்பாளர் வராத போதிலும், தமிழக மீனவர்களுக்கு பிரதமர் மோடி செய்த உதவிகளை கூறி ஆதரவு திரட்டினார். இதையடுத்து, இறுதியாக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற இருந்த பிரச்சாரத்திலும் பாஜக வேட்பாளர் குப்புராம் வராததால், கடும் விரக்தியடைந்த நமீதா பிரச்சார பயணத்தை ரத்து செய்து விட்டு தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினார்.
அங்கு சென்ற பாஜகவினர் மீண்டும் ராமநாதபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அப்போது நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி வேட்பாளர் இல்லாமல் இனிமேல் தங்களை வாக்கு சேகரிக்க அழைக்காதீர்கள் என்றும், தாங்கள் சென்னை செல்வதாகவும் கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்டார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
