வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள் - முன்னாள் அமைச்சர் மீது நடிகை சாந்தினி புகார்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி மீண்டும் புகாரளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
அதிமுக ஆட்சியில், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் இவர் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் தன்னை திருமணம் செய்வதாக கூறி தன்னுடன் வாழ்ந்து, பின்னர் ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
சாந்தினியை தனக்கு யாரென்றே தெரியாது என மணிகண்டன் தெரிவித்த நிலையில், அவருடன் இருந்த புகைப்படங்களை சாந்தினி வெளியிட்டார்.

இவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெங்களூருவில் இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் தூண்டுதலின் பேரில் என் வீட்டின் மீது அவரது நண்பர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ராஜ்யசபா எம்பி சீட்டு கிடைப்பதாக கூறி, தன்னுடைய வாழ்வாதாரத்தை கவனித்துக் கொள்வதாகவும் சொத்துக்கள் தருவதாகவும் கூறி வழக்கை வாபஸ் பெற செய்தார். ஆனால் அதன் பிறகு அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இது குறித்து மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தேன். அவர் 2 முறையும் ஆஜராக வராமல் எனது வீட்டில் அவரது நண்பர்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசி மிரட்டல் விடுத்தார்.
என்னுடைய வழக்கறிஞர்களையும் விலைக்கு வாங்கி விடுகிறார். அதனால் நானே நேரடியாக ஆஜராகியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |